Home மாவட்டங்கள் சென்னை ஐ.பி.எஸ். அதிகாரி அருண் மீதான கண்டனங்கள் நீக்கம்

ஐ.பி.எஸ். அதிகாரி அருண் மீதான கண்டனங்கள் நீக்கம்

சென்னை, நவ. 4-
கட்டுமான நிறுவன உரிமையாளரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்ட விவகாரத்தில், ஐ.பி.எஸ். அதிகாரி அருண் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதை ஏற்று, அவருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் பதிவு செய்த கடுமையான கண்டனங்களை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது.
சென்னை கொளத்தூரில், தே.மு.தி.க. பொதுச்செயலர் பிரேமலதாவின் சகோதரரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுதீஷின் மனைவி பூர்ணஜோதிக்கு சொந்தமான இடம் உள்ளது. அங்கு 234 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டி, அவற்றில் 78 வீடுகளை பூர்ணஜோதிக்கு ஒதுக்குவதாக தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் சர்மா ஒப்பந்தம் செய்திருந்தார்.ஆனால், அந்த 78 வீடுகளில் 48 வீடுகளை போலி ஆவணங்கள் மூலம் விற்று ரூ.42 கோடி மோசடி செய்ததாக பூர்ணஜோதி சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
மேலும், ரூ.1.38 கோடி செலுத்தி ஏமாந்ததாக ரவி என்பவரும் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், 2025 ஆகஸ்ட் 29-ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சந்தோஷ் சர்மா மற்றும் அவரது மனைவி கல்பனா சர்மா கைது செய்யப்பட்டனர்.இந்த வழக்கில்,
அப்போதைய சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ஐ.பி.எஸ். அதிகாரி அருண், சந்தோஷ் சர்மாவை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதை எதிர்த்து, சந்தோஷ் சர்மாவின் மகள் வர்ஷா சர்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம்,
அருணுக்கு எதிராக கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தது. அந்தக் கண்டனங்களை நீக்கக் கோரி அருண் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் விக்ரம் நாத், ஆர்.மகாதேவன்,
அபரேஷ் குமார் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நேரில் ஆஜரான அருண், நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார். அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தின் முக்கியத்துவத்தையும் பொறுப்பையும் உணர்ந்து, சட்ட விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.