Home செய்திகள் உலக செய்திகள் தனியார் ஜெட் விபத்தில் 9 பேர் பலி

தனியார் ஜெட் விபத்தில் 9 பேர் பலி

வாஷிங்டன்: நவ.4-
அமெரிக்காவின் கொலராடோ மாகாணம், ஆஸ்பென் நகரைச் சேர்ந்த ஆடம் ராபின்சன் (45), இரண்டு மென்பொருள் நிறுவனங்களை நடத்தி வந்தார். அந்த நிறுவனங்களின் சராசரி ஆண்டு வருவாய் ரூ.331 கோடியே 30 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளம் தொழிலதிபரான ராபின்சன், கடந்த 1-ம் தேதி தனது மனைவி ஹெலன் (40), மகள் எம்மா (4), மகன் சார்லி (2) ஆகியோருடன் டெக்சாஸ் மாகாணம் ஆஸ்டின் நகரிலிருந்து பஹாமாஸ் தீவுகளுக்கு தனியார் ஜெட் விமானத்தில் புறப்பட்டார். அவர்களுடன், ராபின்சனின் வீட்டு பணிப்பெண் அனிதா மரியா செடினா, குடும்ப நண்பர்கள் ராச்சல் ரீட் மற்றும் சார்மி ஆகியோரும் பயணம் செய்தனர்.
விமானத்தை விமானி ஜெப் கிரிகோரி (55), துணை விமானி நதாலியா (20) ஆகியோர் இயக்கினர். விமானம் புளோரிடா மாகாணம் பாம் பீச் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது, குடியிருப்புப் பகுதியில் விழுந்து வெடித்துச் சிதறியது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 9 பேரும் உயிரிழந்தனர்.விமானம் விபத்துக்குள்ளாகும் முன், கடைசி நிமிடங்களில் துணை விமானி நதாலியா கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டதாக கூறப்படுகிறது. அப்போது, “விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையை நோக்கிப் பாய்கிறது” என்று அவர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுமார் 9,000 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, அது ரேடார் கண்காணிப்பிலிருந்து மறைந்தது. அமெரிக்காவில் நிகழ்ந்த மோசமான விமான விபத்துகளில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. விபத்துக்குள்ளான தனியார் ஜெட் விமானம் 22 ஆண்டுகள் பழமையானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விமானத்தின் கட்டுப்பாட்டை இழந்ததற்கான காரணம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.