Home செய்திகள் உலக செய்திகள் அமெரிக்க தேர்தலில்இந்திய வம்சாவளியினர் வெற்றி

அமெரிக்க தேர்தலில்இந்திய வம்சாவளியினர் வெற்றி

வாஷிங்டன்: நவ.4-
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில், புளோரிடா மாகாணத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 22-வது தொகுதியில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பியா தாண்டியா வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து முன்னாள் கடற்படை வீரர் கேசே அஸ்கார் போட்டியிட்டார். முன்னாள் உயர்நிலைப் பள்ளி முதல்வரான பியா தாண்டியா 51.9 சதவீத வாக்குகளைப் பெற்றார். அஸ்கார் 49.1 சதவீத வாக்குகளைப் பெற்றார்.
புளோரிடாவின் 22-வது தொகுதி, ஜனநாயகக் கட்சியினருக்கு மிகவும் சவாலான தொகுதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அந்தத் தொகுதியை பியா தாண்டியா கைப்பற்றியுள்ளார். அவருக்கு ‘இந்தியன் அமெரிக்கன் இம்பேக்ட்’ அமைப்பின் நிர்வாக இயக்குநர் சிந்தன் பட்டேல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்த தம்பதிக்கு பிறந்தவர் பியா தாண்டியா. தனது 28-வது வயதில் ஏழை மாணவர்களுக்காக பள்ளி ஒன்றைத் தொடங்கினார். இதன் மூலம், மிக இளம் வயதில் உயர்நிலைப் பள்ளி முதல்வராகப் பணியாற்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். கல்வியாளராகவும் தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்ட அவர், தற்போது புளோரிடாவின் புதிய தொகுதியில் வெற்றி பெற்று அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் இடம்பிடித்துள்ளார்.
அமெரிக்கத் தேர்தலில் இந்திய வம்சாவளியினரின் வெற்றியும் தொடர்ந்து வருகிறது. வெர்ஜீனியாவின் 10-வது தொகுதியில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் சுஹாஸ் சுப்பிரமணியம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். கலிபோர்னியாவில் மீண்டும் போட்டியிட்ட அமி பேரா வெற்றி வாய்ப்பில் உள்ளார். சிலிகான் வேலியில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ரோ கண்ணா முன்னிலை பெற்றுள்ளார். வாஷிங்டனில் மீண்டும் போட்டியிட்ட பிரமிளா ஜெயபாலும் முன்னிலையில் உள்ளார். மேரிலாந்து துணை கவர்னராக அருணா மில்லர் மீண்டும் தேர்வாகியுள்ளார்.