Home மாவட்டங்கள் சென்னை ஏஐக்கு மனிதர்களைப் போன்ற விழிப்புணர்வு இல்லை

ஏஐக்கு மனிதர்களைப் போன்ற விழிப்புணர்வு இல்லை

சென்னை, நவ. 5-
மனிதர்களைப் போல செயற்கை நுண்ணறிவுக்கு தனிப்பட்ட விழிப்புணர்வு கிடையாது என்று ராமகிருஷ்ண மடத்தின் துறவியும் ஆன்மிகச் சொற்பொழிவாளருமான சுவாமி சர்வப்ரியானந்தா தெரிவித்தார். சென்னை சர்வதேச மையம் சார்பில், ‘பண்டைய ஞானம் நவீன காலக் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியுமா?’ என்ற தலைப்பிலான சிறப்பு கருத்தரங்கம் தியாகராய நகரில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சுவாமி சர்வப்ரியானந்தா, தான் எழுதிய ‘மனம் மற்றும் நனவு பற்றிய உரையாடல்கள்’ என்ற நூலை வெளியிட்டார். அதன் முதல் பிரதியை டிவிஎஸ் கேபிட்டல் தலைவர் கோபால் சீனிவாசன் பெற்றுக்கொண்டார். கருத்தரங்கில் சுவாமி சர்வப்ரியானந்தா பேசியதாவது: “நான் யார்?” என்பது மனிதர்கள் தங்களுக்குள் கேட்டுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான கேள்வியாகும். இதற்கான பதில்கள் உபநிடதங்கள் காலத்திலிருந்தே இந்தியத் தத்துவத்தில் இடம்பெற்றுள்ளன. புத்த மதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் உள்ளிட்ட பல்வேறு தத்துவங்களுக்கு இடையே நடைபெற்ற விவாதங்கள் இந்தியத் தத்துவத்தை வளர்த்துள்ளன. தற்போது குவாண்டம் இயற்பியல், நரம்பியல் உள்ளிட்ட நவீன அறிவியல் துறைகள் மனித விழிப்புணர்வு குறித்த பல்வேறு கேள்விகளுக்கு விடை தேடி வருகின்றன. மனித மூளை எவ்வாறு விழிப்புணர்வை உருவாக்குகிறது என்பது இன்னும் முழுமையாக விளக்கப்படாத ஒன்றாகவே உள்ளது. செயற்கை நுண்ணறிவு பல திறன்களைப் பெற்றிருந்தாலும், அதற்கு மனிதர்களைப் போன்ற தனிப்பட்ட விழிப்புணர்வு இருப்பதாகக் கூற முடியாது. அறிவாற்றலும் விழிப்புணர்வும் வெவ்வேறானவை. மனிதர்கள் பலராகவும், அவர்களின் உடல், மனம், எண்ணங்கள் வெவ்வேறாகவும் இருந்தாலும், அனைவருக்குள்ளும் இருக்கும் அடிப்படை விழிப்புணர்வு ஒன்றுதான் என்பதே அத்வைதத்தின் முக்கிய கருத்தாகும். அனைத்து உயிர்களும் ஒரே அடிப்படை உண்மையின் வெளிப்பாடுகள். இதை உணரும்போது வெறுப்பு, பொறாமை, பகைமை குறைந்து அன்பும் ஒற்றுமையும் உருவாகும். பிறருக்குத் தீங்கு செய்யும் எண்ணமும் ஏற்படாது என்று அவர் தெரிவித்தார்.