Home செய்திகள் தேசிய செய்திகள் மின் சேமிப்பு திறனுக்கு ரூ.14,500 கோடி ஒதுக்கீடு

மின் சேமிப்பு திறனுக்கு ரூ.14,500 கோடி ஒதுக்கீடு

புதுடில்லி, நவ. 5-
நாடு முழுவதும் கூடுதலாக 92,000 மெகாவாட் மின் சேமிப்பு திறனை உருவாக்கும் திட்டத்துக்கு ரூ.14,500 கோடி நிதியுதவி வழங்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
இதனுடன், லித்தியம், நிக்கல் உள்ளிட்ட முக்கிய கனிமங்களை உள்நாட்டிலேயே பிரித்தெடுத்து சுத்திகரிக்கும் திட்டத்துக்கு ரூ.2,814 கோடி ஒதுக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மின் சேமிப்பு கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டம், 2026–27 முதல் 2030–31 வரையிலான ஐந்து நிதியாண்டுகளில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்களுக்கான மொத்த முதலீடு ரூ.97,600 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய மின் சேமிப்பு திறனுடன் ஒப்பிடுகையில், புதிதாக உருவாக்கப்படும் திறன் 170 சதவீதம் அதிகமாக இருக்கும். சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி மூலம் கிடைக்கும் உபரி மின்சாரத்தை சேமித்து, மின் தேவை அதிகரிக்கும் நேரங்களில் பயன்படுத்துவதன் மூலம் மின் விநியோகத்தின் நிலைத்தன்மையை மேம்படுத்த முடியும். மேலும், 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்கவும், வழக்கமான மின் உற்பத்தி ஆதாரங்களைச் சார்ந்திருப்பதை குறைக்கவும் இத்திட்டம் உதவும். முக்கிய கனிமங்களை அவற்றின் தாதுக்களில் இருந்து பிரித்தெடுத்து சுத்திகரிக்கும் தொழில் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் திட்டத்துக்கு, 2026–27 முதல் 2030–31 வரையிலான ஐந்து நிதியாண்டுகளுக்கு ரூ.2,814 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் நாட்டில் இரண்டு லித்தியம் ஆலைகளும், இரண்டு நிக்கல் ஆலைகளும் என மொத்தம் நான்கு தொழிற்சாலைகள் அமைக்கப்படும். இதன் மூலம் முக்கிய கனிமங்கள் மற்றும் பேட்டரி உற்பத்தியில் இறக்குமதி சார்பைக் குறைத்து, உள்நாட்டு தொழில்துறையை வலுப்படுத்த முடியும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.