Home சினிமா கமல்ஹாசனுக்கு வைரமுத்து பிறந்தநாள் வாழ்த்து

கமல்ஹாசனுக்கு வைரமுத்து பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: நவ.7-
நடிகர் கமல்ஹாசன் தனது 72-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி, அவருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். கவிப்பேரரசு வைரமுத்துவும் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வைரமுத்து வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “நவம்பர் ஏழு, நாயகன் பிறந்தநாள். தமிழ்நாட்டின் பெருமிதங்களுள் ஒன்று பத்மபூஷண் கமல்ஹாசன். எந்தப் பூவை நினைந்து நுகர்ந்தாலும் அந்தப் பூவின் வாசம் வீசுமாம் மனோரஞ்சிதம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நடிகர்–இயக்குநர், கதாசிரியர்–வசனகர்த்தா, பாடகர்–பாடலாசிரியர், தயாரிப்பாளர்–தலைவர் எனப் பல பரிமாணங்களின் பரிணாமமாக கமல்ஹாசன் விளங்குவதாக அவர் தெரிவித்துள்ளார். உடல் என்ற ஒரே பொருளை இரும்பாகவும், ரப்பராகவும், கல்லாகவும், களிமண்ணாகவும் மாற்றும் மாகலைஞர் என்றும் கமல்ஹாசனை வைரமுத்து பாராட்டியுள்ளார்.
தாதா சாகேப் பால்கே விருதுக்குப் பெருந்தகுதி பெற்றவர் கமல்ஹாசன் என்றும், “உன்னிலும் எவருண்டு? அரசியல் ஊடாடாவிடில் அடுத்தாண்டு உனக்குத்தான். தர்மம் வெற்றிபெறட்டும்; தர்மனும் வெற்றிபெறட்டும். வாழ்க நண்பரே!” என்றும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “அன்பிற்கினிய கமல்ஹாசனுக்கு, தங்களின் 07.11.2026-ஆம் தேதிய பிறந்த நாளையொட்டி, என்னுடைய இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், மனநிறைவுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்ந்திடவும், கலைத்துறை மற்றும் பொது வாழ்வில் மேலும் பல சிறப்புகளைப் பெற்று, மக்களுக்கான தங்கள் அர்ப்பணிப்பான பணிகளைத் தொடர்ந்து சிறப்புடன் ஆற்றிடவும் என் அன்பான வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி, அவரது புதிய படத்தின் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது 237-வது படத்துக்கு ‘சண்டியர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‘சண்டியர்’ என்ற பெயர் கமல்ஹாசனின் படத்துக்கு வைக்கப்பட்டுள்ளது. ‘விரும்பாண்டி’ படத்தில் விட்டதை இப்போது வைத்துள்ளார்.