
லக்னோ, நவ. 9-
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 80 சதவீத தொகுதிகளைக் கைப்பற்றி பிரம்மாண்ட வெற்றி பெறும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் பேசிய அவர், பாஜக கூட்டணி 80 சதவீத வாக்குகளைப் பெறும் என்றும், மீதமுள்ள 20 சதவீத வாக்குகள் மட்டுமே எதிர்க்கட்சிகளுக்குச் செல்லும் என்றும் கூறினார். 2022 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாகவே யோகி ஆதித்யநாத் ‘80-20’ சூத்திரத்தை முதன்முதலில் முன்வைத்தார். தேசியவாதம், நல்லாட்சி, வளர்ச்சி ஆகியவற்றை விரும்பும் 80 சதவீத வாக்காளர்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்றும், மீதமுள்ள 20 சதவீதத்தினர் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவளிப்பார்கள் என்றும் அவர் அப்போது குறிப்பிட்டிருந்தார். பாஜக கூட்டணி 350-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுமா என்ற கேள்விக்கு பதிலளித்த யோகி ஆதித்யநாத், “நாங்கள் 80-20 என்ற அடிப்படையில் களமிறங்குகிறோம். பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் 80 சதவீத வாக்குகளைப் பெறும். இந்தச் சமன்பாடு சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கையிலும் பிரதிபலிக்கும். நாங்கள் 350-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம்” என்று தெரிவித்தார். உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 403 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. முதல்வரின் கணிப்பின்படி 80 சதவீதத் தொகுதிகள் கிடைத்தால், பாஜக கூட்டணி சுமார் 322 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. மீதமுள்ள 81 தொகுதிகள் எதிர்க்கட்சிகளுக்குக் கிடைக்கும். 2017 தேர்தலில் பாஜக கூட்டணி 325 தொகுதிகளைக் கைப்பற்றியது. 2022 தேர்தலில் அந்தக் கூட்டணி 273 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 2022-இல் இழந்த தொகுதிகளை மீண்டும் கைப்பற்றி, மாநிலத்தில் பாதுகாப்பான ஆட்சியை பாஜக மீண்டும் அமைக்கும் என்றும் யோகி ஆதித்யநாத் கூறினார்.













