
பெர்த், நவ. 11-
2018-ம் ஆண்டு பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், கேமரூன் பேன்கிராப்ட் ஆகியோர் சிக்கினர். இந்த விவகாரம் குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா தனது ‘Sabr’ என்ற சுயசரிதை நூலில் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 2018-ல் நடந்த பந்தை சேதப்படுத்தும் நடவடிக்கையில் ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணிக்கும் தொடர்பு இருந்ததாக கவாஜா குறிப்பிட்டுள்ளார். அவரது கருத்துக்கு டேவிட் வார்னரும் ஆதரவு தெரிவித்திருந்தார். இந்நிலையில், கவாஜாவின் கருத்தை ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் நிராகரித்துள்ளார்.இதுகுறித்து ஸ்டார்க் கூறியதாவது: “களத்துக்கு என்ன கொண்டு வரப்பட்டது என்பது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. இதை 2021-ல் வெளியிட்ட அறிக்கையிலும் கூறியிருந்தோம். கேப்டவுன் மைதானத்தில் இருந்த திரையைப் பார்த்துத்தான் நடந்ததை அறிந்துகொண்டோம். அப்போது நடந்தது என்ன என்பது எனக்கும் தெரிந்தது. எனவே, இதுகுறித்து புத்தகத்தை எழுதியவர்தான் விளக்க வேண்டும். அணியின் மற்ற வீரர்கள் இதை அறிந்திருந்தார்களா என்பது குறித்து வேறு யாராவது விளக்குவார்கள். இங்கிலாந்துடன் தொடர் தொடங்க உள்ள நிலையில், இதுகுறித்து நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்” என்றார். 2018-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. அப்போது கேப்டவுனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பேன்கிராப்ட் பந்தில் மணல் காகிதத்தைப் பயன்படுத்தி சேதப்படுத்திய காட்சி கேமராவில் பதிவானது. இதையடுத்து, பந்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. இந்தச் சம்பவம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கவுரவத்தை குலைத்துவிட்டதாக அந்த நாட்டு ஊடகங்கள் கடும் கண்டனம் தெரிவித்தன. தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பதவியிலிருந்தும், டேவிட் வார்னர் துணைக் கேப்டன் பதவியிலிருந்தும் விலகினர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய மூன்று வீரர்களுக்கும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா நீண்டகாலத் தடை விதித்தது. தடை முடிந்த பின் ஸ்மித்தும் வார்னரும் சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்பினர்.
















