Home மாவட்டங்கள் சென்னை பவன் கல்யாண் பிரிவைத் தொடர்ந்து ரேணு தேசாய் பதிவு

பவன் கல்யாண் பிரிவைத் தொடர்ந்து ரேணு தேசாய் பதிவு

சென்னை, நவ. 11-
தெலுங்கு நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாண், தனது 3-வது மனைவி அன்னா லெஷ்னேவாவை பிரிவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அவரது முன்னாள் மனைவியும் நடிகையுமான ரேணு தேசாய் வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. பவன் கல்யாண்–அன்னா லெஷ்னேவா இருவரும் பிரிவதாக அறிக்கை வெளியிட்ட நிலையில், அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. சில மாதங்களுக்கு முன்புகூட அன்னா, பவன் கல்யாணுக்காக திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்ததுடன், முடி காணிக்கை செலுத்தி அன்னதானமும் செய்திருந்தார். இந்நிலையில், திடீரென பிரிவதாக அறிவித்தது குறித்து ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்த சூழலில், ரேணு தேசாய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் ஒரு பதிவை வெளியிட்டார். ஒருவர் ஏற்கெனவே வாழ்க்கையில் கடினமான சூழலை எதிர்கொண்டிருக்கும்போது, அவரை மேலும் விமர்சிப்பது சரியல்ல என்றும், கீழே விழுந்தவரை மீண்டும் எட்டி உதைப்பது மனிதாபிமானமற்ற செயல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எந்த நிலையிலும் அவர்களும் மனிதர்கள்தான் என்பதை மறந்துவிடக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஒருவரை விமர்சிப்பதற்கு முன்பு நமது வாழ்க்கையையும் திரும்பிப் பார்க்க வேண்டும் என்றும், நம்மிடமே குறைகள் இருக்கும்போது மற்றவர்களின் வாழ்க்கையை மட்டும் குறை கூறுவது சரியல்ல என்றும் ரேணு தேசாய் கூறியுள்ளார். மனிதராக இருப்பதற்கு பரிவும் கருணையும் அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.