Home மாவட்டங்கள் சென்னை நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை

நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை

சென்னை, நவ. 11-
சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று (நவ. 11) ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகத்திலும், புதுவையிலும் லேசான மழை பெய்யக்கூடும்.நாளை (நவ. 12) தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும். 13-ந் தேதி கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மலைப்பகுதிகள், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. வரும் 13-ந் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய பகுதிகளிலும், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளிலும் வளிமண்டல சுழற்சிகள் நிலவுகின்றன. 14-ந் தேதி பல மாவட்டங்களில் மிதமான மழையும், 15-ந் தேதி தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் காரைக்காலில் கனமழையும் பெய்யக்கூடும். 16-ந் தேதி நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்சம் 25 முதல் 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.