
கிருஷ்ணகிரி: நவ. 11-
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வன்னியபுரத்தில் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள நானோ வடிகட்டுதல் தொட்டியில் பராமரிப்பு மற்றும் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அப்போது நீர் சுத்திகரிப்புத் தொட்டிக்குள் விழுந்து, ஒப்பந்தத் தொழிலாளர்களான தருமபுரி மாவட்டம் பெல்ராம்பட்டியைச் சேர்ந்த சாரதிகுமார் (25), பஞ்சபள்ளி தின்னூரைச் சேர்ந்த அக்மல் (28), அனுமந்தபுரம் அருகேயுள்ள ஜம்பூத் பகுதியைச் சேர்ந்த காவேரி (30) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.
அவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில், காலை மருத்துவமனையில் திரண்ட உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், உடல்களை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம், கிருஷ்ணகிரி வட்டாட்சியர் ராஜலட்சுமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, உயிரிழந்த 3 பேரும் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், எனவே அவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். நிவாரணம் வழங்கும் வரை உடல்களைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் கூறினர்.
இதையடுத்து, போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிலர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.எஸ்.அனிதா மற்றும் ஒப்பந்த நிறுவனத்தினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, அனைத்து தொழிலாளர்களின் பெயரிலும் காப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு விரைவில் காப்பீட்டுத் தொகை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஒப்பந்த நிறுவனம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.பின்னர் 3 பேரின் உடல்களுக்கும் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. போராட்டத்தால் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த பிறகே 3 பேரின் உயிரிழப்புக்கான முழுமையான தகவல் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.
















