
சென்னை: நவ. 12–-
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் மகேஷ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் திமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும், தனியார் பள்ளிகள் சங்க மாநிலப் பொருளாளருமான முத்துக்குமார் தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்நிலையில், அக். 28-ஆம் தேதி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் முத்துக்குமார் சரணடைந்தார். அவருக்கு நவம்பர் 12-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
அவரது நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைய உள்ளது. மகேஷ், முத்துக்குமார் மற்றும் மற்றொரு திமுக பிரமுகரான அரசகுமார் ஆகியோருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணையின் ஒரு பகுதியாக, திமுக நிர்வாகியான முத்துக்குமாருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் 29 வங்கிக் கணக்குகளை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முடக்கியுள்ளனர். அந்தக் கணக்குகளில் இருந்த ரூ.4.5 கோடியையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு திமுக பிரமுகரான அரசகுமாருக்கு தொடர்புடைய 20 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.அந்தக் கணக்குகளில் ரூ.4 லட்சம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, முன்னாள் அமைச்சர் மகேஷின் வங்கிக் கணக்குகளும் போலீஸாரால் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வின் அடிப்படையில், அவரது வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் மூவரின் நிதிப் பரிவர்த்தனைகள் குறித்தும் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.















