
பீஹார், நவ. 13-
பீஹார், உத்தர பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் சத் பண்டிகை இன்று (நவம்பர் 13) தொடங்கி 4 நாட்கள் நடைபெறுகிறது. சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், குடும்பத்தின் நல்வாழ்வு மற்றும் செழிப்புக்காகவும் வட இந்தியாவில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
சத் பண்டிகையின் முக்கிய நாட்களில் பக்தர்கள் ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடுவது வழக்கம். மேலும், மாலையில் மறையும் சூரியனுக்கும், மறுநாள் அதிகாலையில் உதிக்கும் சூரியனுக்கும் பக்தர்கள் வழிபாடு நடத்துகின்றனர். மக்கள் நம்பிக்கையிலும் சூரிய வழிபாட்டிலும் வேரூன்றிய இந்த விழா, தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறும் முக்கியமான பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், சத் பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“மக்கள் நம்பிக்கையிலும் சூரிய வழிபாட்டிலும் வேரூன்றிய, நான்கு நாட்கள் கொண்டாடப்படும் சத் பண்டிகையின் துவக்கத்தை முன்னிட்டு, எனது சக நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விரதம் இருக்கும் அனைவருக்கும் எனது மரியாதையை உரித்தாக்குகிறேன். அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும் என்பதே எனது விருப்பம்” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.













