Home செய்திகள் தேசிய செய்திகள் நாடாளுமன்ற அத்துமீறல் வழக்கில் இருவரின் ஜாமீன் மனுக்கள் நிராகரிப்பு

நாடாளுமன்ற அத்துமீறல் வழக்கில் இருவரின் ஜாமீன் மனுக்கள் நிராகரிப்பு

டெல்லி: நவ. 15- நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மனோரஞ்சன் டி, சாகர் சர்மா ஆகிய இருவரின் ஜாமீன் மனுக்களை டெல்லி நீதிமன்றம் இரண்டாவது முறையாக நிராகரித்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி நாடாளுமன்றத்தில் புகைக் குப்பிகளை வீசி பாதுகாப்பு அத்துமீறலில் ஈடுபட்டதாக மனோரஞ்சன் டி, சாகர் சர்மா உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரும் நீண்டகாலமாக சிறையில் இருப்பதையும், இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்ற இருவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டி மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த சிறப்பு நீதிபதி கிரண் பன்சால், இருவருக்கும் ஜாமீன் வழங்க மறுத்து உத்தரவிட்டார். சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் 43டி(5)-வது பிரிவின் கீழ் ஜாமீன் வழங்குவதற்கான கட்டுப்பாடுகள் இந்த வழக்குக்கும் பொருந்தும் என்று அவர் குறிப்பிட்டார். குற்றச்சாட்டுகள் முதற்கட்ட விசாரணையில் உண்மையாக இருப்பதற்குப் போதிய முகாந்திரங்கள் உள்ளதாகவும், நாடாளுமன்ற நடவடிக்கைகளைப் பாதிக்கும் வகையில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் செயல்கள் அமைந்துள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது. இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நீலம் ரவுலியா என்ற நீலம் ஆசாத் மற்றும் மகேஷ் குமாவத் ஆகியோருக்கு 2025-ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது. இதனை முன்வைத்தே மனோரஞ்சன், சாகர் சர்மா ஆகியோர் ஜாமீன் கோரியிருந்தனர். ஆனால், நீலம் ஆசாத் நாடாளுமன்றக் கட்டடத்துக்கு வெளியே இருந்ததாகவும், மகேஷ் குமாவத் சம்பவத்தன்று டெல்லியிலேயே இல்லை என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. மனோரஞ்சன், சாகர் சர்மா இருவரும் நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் நுழைந்து, பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து மக்களவைக்குள் குதித்ததாகவும், காலணிகளில் மறைத்து வைத்திருந்த புகைக் குப்பிகளைப் பயன்படுத்தியதாகவும் நீதிமன்றம் கூறியது. 2001-ம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலின் நினைவு தினமான டிசம்பர் 13-ம் தேதியைத் திட்டமிட்டு தேர்வு செய்ததாகவும், செல்போன் தகவல்களை அழித்து அவற்றை லலித் ஜாவிடம் ஒப்படைத்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளது. விசாரணை தாமதமாவதை மட்டும் காரணமாகக் கொண்டு ஜாமீன் வழங்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.