
கேப் கனாவெரல்: நவ. 19-
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஏவிய வாயேஜர்-1 விண்கலம், பூமியில் இருந்து 2,590 கோடி கி.மீ. தொலைவை நேற்று எட்டியது. இது ஒரு முழு நாள் ஒளி பயணம் செய்யும் தொலைவாகும்.
வாயேஜர்-1, 1977 செப். 5-ல் புளோரிடாவின் கேப் கனாவெரலில் இருந்து ஏவப்பட்டது. அதன் இரட்டை விண்கலமான வாயேஜர்-2, அதற்கு முன்பாக ஆக. 20-ல் ஏவப்பட்டது. இரு விண்கலங்களும் வெளிக்கோள்களை ஆய்வு செய்வதற்காக வடிவமைக்கப்பட்டன.
வாயேஜர்-1 தனது பயணத்தில் வியாழன், சனி ஆகிய கோள்களை நெருங்கிச் சென்றது. 1979 மார்ச் 5-ல் வியாழனை அணுகியபோது, அதன் கேமரா வியாழனின் நிலவான அயோவில் எரிமலைகள் வெடிப்பதைப் படம் பிடித்தது. பூமிக்கு வெளியே செயல்பாட்டில் உள்ள எரிமலைகள் இருப்பதற்கான முதல் சான்றாக இது அமைந்தது. 1980 நவ. 12-ல் சனியை நெருங்கியபோது, சனி வளையங்களின் சிக்கலான அமைப்பையும், டைட்டன் நிலவின் அடர்த்தியான நைட்ரஜன் வளிமண்டலத்தையும் வெளிப்படுத்தியது.
சனியைக் கடந்த பிறகு, சூரியக் குடும்பத் தளத்திலிருந்து சுமார் 30 டிகிரி கோணத்தில் விலகி வெளிநோக்கிய பயணத்தைத் தொடங்கியது. 2012 ஆக. 25-ல் சூரியக் குடும்ப எல்லையான ஹீலியோபாஸ் பகுதியைக் கடந்தது. அப்போது அது சூரியனிலிருந்து சுமார் 1,830 கோடி கி.மீ. தொலைவில் இருந்தது. மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு பொருள் விண்மீன்களுக்கு இடையேயான விண்வெளிக்குள் நுழைந்த சாதனை இதன் மூலம் நிகழ்ந்தது.
வாயேஜர்-1-ன் ஆற்றல் தேவையை மூன்று ரேடியோ ஐசோடோப் வெப்ப மின் உற்பத்திக் கருவிகள் (RTGs) வழங்குகின்றன. புளூட்டோனியம்-238 சிதைவில் உருவாகும் வெப்பத்தை இவை மின்சாரமாக மாற்றுகின்றன. மின் உற்பத்தி 2035 வரை மட்டுமே நீடிக்கும் எனக் கருதப்படுகிறது. எனினும், விண்கலம் தொடர்ந்து பயணிக்கும். அடுத்த 40 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு கிலீஸ் 445 விண்மீனுக்கு அருகே அது கடந்து செல்லும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.















