Home செய்திகள் தேசிய செய்திகள் அகிலேஷ் பேரணியில் புல்டோசர் மோதி சிறுவன் பலி

அகிலேஷ் பேரணியில் புல்டோசர் மோதி சிறுவன் பலி

கோரக்பூர், நவ. 20–-
உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், முதல்-வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்தத் தொகுதியான கோரக்பூரில் சமாஜ்வாதி கட்சியின் ‘பிடிஏ ரத யாத்திரை’ நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க சாலையில் பேரணியாகச் சென்ற அக்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை வரவேற்கும் வகையில் பூ இதழ்களைத் தூவியபடி சென்ற புல்டோசர் மோதியதில் 12 வயது சிறுவன் உயிரிழந்தார். உயிரிழந்த சிறுவன், சவுரி சவுரா பகுதியிலுள்ள ராஜ்தானி கிராமத்தைச் சேர்ந்த ஆர்யவர்தன் சிங் (12) எனத் தெரியவந்துள்ளது. அவர், கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இருந்து தனது சகோதரியை அழைத்து வருவதற்காகச் சாலையைக் கடந்து சென்றுகொண்டிருந்ததாக அவரது தந்தையும், உள்ளூர் பாஜக நிர்வாகியுமான ஓம்கார் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஓம்கார் சிங் கூறியதாவது: “கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இருந்து எனது மகளை அழைத்து வருவதற்காக, என் மகன் ஆர்யவர்தன் சாலையைக் கடந்து கொண்டிருந்தான். அப்போது அகிலேஷின் வாகனங்கள் ஏற்கெனவே முன்னேறிச் சென்றுவிட்டன. பின்னால் இருந்து அதிவேகமாக வந்த புல்டோசர் இயந்திரம் என் மகன் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்ததால் அவன் உயிரிழந்தான்” என்றார்.