Home செய்திகள் உலக செய்திகள் ஐந்து நாளில் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் நீக்கம்

ஐந்து நாளில் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் நீக்கம்

வாஷிங்டன், அக். 17-
வெள்ளை மாளிகையின் புதிய செய்தித் தொடர்பாளராகப் பொறுப்பேற்ற கேட்டி ஜக்கரியா, பணியில் சேர்ந்த ஐந்தே நாட்களில் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். வெள்ளை மாளிகையின் முந்தைய செய்தித் தொடர்பாளராக இருந்த கரோலின் லீவிட்டுக்குப் பதிலாக, கேட்டி ஜக்கரியாவை புதிய செய்தித் தொடர்பாளராக அதிபர் டிரம்ப் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி நியமித்தார். இதையடுத்து அவர் அந்தப் பொறுப்பை ஏற்றார். பதவியேற்ற பின்னர், தனது முதல் அதிகாரப்பூர்வ செய்தியாளர் சந்திப்பை ஜக்கரியா நடத்தினார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதில் அவர் கடுமையாகத் தடுமாறியதாகக் கூறப்படுகிறது. குறிப்பிட்ட மூன்று ஊடக நிறுவனங்களின் கேள்விகளுக்கு மட்டுமே பதிலளித்த அவர், சுமார் 14 நிமிடங்களிலேயே செய்தியாளர் சந்திப்பை முடித்துக்கொண்டு வெளியேறினார். மேலும், உரிய தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெறாமல் தன்னை வழக்கறிஞர் எனக் கூறிக்கொண்டதாகவும் ஜக்கரியா மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் அவர் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிபர் டிரம்பிடம், ஜக்கரியா குறித்த விமர்சனங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “ஊடகங்களில் ஜக்கரியா மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இத்தகைய விமர்சனங்களை அவர் எதிர்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று கருதுகிறேன். நிம்மதியாக இருப்பதே சிறந்தது. இந்த விமர்சனங்கள் அவருக்குத் தேவையா என அவரிடம் நான் பேசினேன். அவர் மன அமைதியுடன் வாழ்வதையே நான் விரும்புகிறேன்” என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, நியமிக்கப்பட்ட ஐந்து நாட்களிலேயே கேட்டி ஜக்கரியா வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.