
சிகாகோ: அக். 21-
அமெரிக்காவில் ஹிந்து கோவிலில், 19 வயது மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், இச்சம்பவத்தை எப்.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என 105 பார்லிமென்ட் உறுப்பினர்கள், அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
இலினாய்ஸ் மாகாணம் அரோரா பகுதியில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோவிலுக்குள் 19 வயது வாலிபன் ஒருவன், ஷாட்கன் ரக துப்பாக்கியுடன் வெறியோடு நுழைந்துள்ளான். அங்கு குழுமியிருந்த பக்தர்கள் மீது சரமாரியாக சுட அவன் திட்டமிட்டிருந்த போது, நல்லவேளையாக கடைசி வினாடியில் துப்பாக்கி இயங்காமல் சிக்கிக்கொண்டது. இதனால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டு, பக்தர்கள் நூலிழையில் உயிர் தப்பினர்.
105 எம்.பி.,க்கள் கடிதம்:
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அக்டோபர் 20ம் தேதி அமெரிக்க பார்லிமென்ட் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, எப்.பி.ஐ., இயக்குநருக்கு கடிதம் ஒன்றை அனுப்பினர். இந்திய வம்சாவளி எம்.பி., ராஜா கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அனுப்பப்பட்ட இக்கடிதத்தில், 4 செனட்டர்கள் உட்பட மொத்தம் 105 பார்லி., உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். குறிப்பாக, இந்திய வம்சாவளி எம்.பி.,க்களான பிரமிலா ஜெயபால், ரோ கன்னா, அமி பேரா, சுஹாஸ் சுப்ரமணியம், தானேதர் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் இக்கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு எதிராக இணையதளங்களில் பெருகிவரும் பகிரங்க மிரட்டல்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை எம்.பி.,க்கள் கேட்டுள்ளனர். தங்கள் கோரிக்கைக்கு வலுசேர்க்கும் வகையில், இரண்டு முக்கிய ஆய்வு அறிக்கைகளையும் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
5.42 லட்சம் வெறுப்பு பதிவுகள்: கடந்த செப்டம்பர் 2026ல் வெளியான ஆய்வு அறிக்கையின்படி, 2025 ஜனவரி முதல் 2026 ஜூன் வரையிலான குறுகிய காலகட்டத்தில் மட்டும், தெற்காசியர்களுக்கு எதிராக 5 லட்சத்து 42 ஆயிரத்துக்கும் அதிகமான வன்மப் பதிவுகள், சமூக வலைதளத்தில் கொட்டப்பட்டுள்ளன. 2024 ஜனவரியுடன் ஒப்பிடும்போது, இத்தகைய பதிவுகளின் எண்ணிக்கை சுமார் 240 சதவீதம் அதிகமாகும்.பிரபல ‘கார்னகி எண்டோவ்மென்ட்’ அமைப்பு நடத்திய ஆய்வில், 2025ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, இனவெறி கருத்துக்களை அடிக்கடி எதிர்கொள்வதாக 48 சதவீத இந்திய – அமெரிக்கர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். மேலும், 4 பேரில் ஒருவர் (25%) இழிவான இனவெறிச் சொற்களால் நேரடியாக அவமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.
டிரம்ப் நிர்வாகத்திற்கு கண்டனம்: மத மற்றும் இனரீதியான முன்முடிவுகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கும் வகையில் பேசி வரும் டிரம்ப் நிர்வாகத்தின் போக்கையும் எம்.பி.,க்கள் தங்களது கடிதத்தில் கடுமையாக சாடியுள்ளனர். வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் எக்காரணத்தைக் கொண்டும் சகித்துக் கொள்ளப்படாது என்றும், உடனடியாக இதில் எப்.பி.ஐ., முழுவீச்சில் களமிறங்கி தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.













