
சென்னை: அக். 21-
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது இன்று காலை உருவானதாகவும், இதனை இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் தாக்கத்தால், அடுத்தடுத்த நாட்களில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அக். 21, 22 ஆகிய தேதிகளில் 12 செ.மீ. முதல் 20 செ.மீ. வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அந்த இரு நாட்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் தற்போது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
இதற்கிடையே, தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அக். 23-ஆம் தேதி வாக்கில் மற்றொரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. பின்னர், அது வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 3 நாட்களில் மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.













