
தூத்துக்குடி: அக். 21-
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோயில் தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், சிதம்பரேஸ்வரர் கடற்கரை வளாகத்தில் நள்ளிரவு 12 மணிக்கு கோலாகலமாக நடைபெற்றது. இதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்தத் தசரா விழா, மைசூர் தசராவுக்கு இணையாக உலகப் புகழ்பெற்றதாகக் கருதப்படுகிறது. இந்த ஆண்டு விழா கடந்த 11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விரதம் மேற்கொண்ட பக்தர்கள், காளி, முருகன், அம்மன் உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களின் வேடமணிந்து ஊர் ஊராகச் சென்று காணிக்கை வசூலித்து வந்தனர்.
விழாவின் 8-ஆம் நாளான திங்கள்கிழமை காலை முதல் இரவு 7.30 மணி வரை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இரவு 10 மணிக்கு அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் முத்தாரம்மன் திருவீதியுலா நடைபெற்றது. சூரசம்ஹார நிகழ்ச்சியில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய முத்தாரம்மன், முதலில் மகிஷாசுரனை வதம் செய்தார். தொடர்ந்து சிங்க முகத்துடன் வந்த சூரனையும், எருது முகத்துடன் வந்த சூரனையும் வதம் செய்தார். இறுதியாக சேவல் வடிவில் கடும் போரிட்ட சூரனை, சூலாயுதத்தால் முத்தாரம்மன் சம்ஹாரம் செய்தார். அப்போது பக்தர்கள் “ஓம் காளி, ஜெய் காளி” என முழக்கமிட்டனர். சூரசம்ஹாரம் முடிந்ததும் முத்தாரம்மனுக்கு சாந்தாபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து கடற்கரை மேடையில் அம்மன் எழுந்தருளல், அபிஷேக ஆராதனைகள், அதிகாலை 3 மணிக்கு திருத்தேர் பவனி, காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் திருவீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் காப்பு களைதல், அபிஷேகம், சிறப்பு அபிஷேகம், புஷ்ப அலங்காரம், அன்னதானம் ஆகியவையும் நடைபெற்றன. விழாவையொட்டி தமிழகம் மட்டுமின்றி மும்பை, கேரளா, கர்நாடகா, ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்தனர். கடற்கரையில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.













