Home மாவட்டங்கள் சென்னை ஆதரவை வாபஸ் பெற்றால் அமைச்சரவையே இருக்காது

ஆதரவை வாபஸ் பெற்றால் அமைச்சரவையே இருக்காது

சென்னை, செப்டம்பர் 21-
கம்யூனிஸ்ட் கட்சிகள் அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்றால், தவெக அமைச்சரவையே இருக்காது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மாநிலச் செயலாளருமான இரா.முத்தரசன் தெரிவித்தார்.சென்னை பாடியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு திடீரென எங்கள் மீது ஏன் கோபம் வந்தது என்று தெரியவில்லை. சட்டப்பேரவையிலும், சட்டப்பேரவைக்கு வெளியிலும் முதல்-அமைச்சர் விஜய்யும், தவெக அமைச்சர்களும் பிரச்சினைகளைத் திசைதிருப்பி வருகின்றனர். சட்டப்பேரவையில் ஒரு உறுப்பினர் கேள்வி எழுப்பினால், அதற்கு முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் பதிலளிக்க வேண்டும்.
அதற்கு மாறாக, கேள்விக்கு நேரடியாகப் பதில் அளிக்காமல் பிரச்சினையைத் திசைதிருப்பிப் பேசுவதால் எந்தப் பயனும் ஏற்படாது. இதுபோன்று பிரச்சினைகளைத் திசைதிருப்புவதன் மூலம் எந்தப் பிரச்சினையும் தீர்ந்துவிடாது. இடதுசாரிக் கட்சிகளின் தயவால்தான் இந்த ஆட்சி நடைபெற்று வருவதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறுகிறார்.
ஆனால், தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்துள்ள சிபிஐ, சிபிஎம் கட்சிகள் தங்களது ஆதரவை வாபஸ் பெற்றுவிட்டால், அமைச்சரவையே இருக்காது. இதற்காகத்தான் ஆளுநரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநிலச் செயலாளர்கள் எப்போது ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவிப்பார்கள் என்று அவர் காத்திருக்கிறார். எனவே, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இந்த நிலைமையை உணர்ந்து பேச வேண்டும்.இவ்வாறு இரா.முத்தரசன் கூறினார்.