
சென்னை: அக். 19-
தமிழகம் முழுவதும் வீடுகள், வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிலகங்களில் ஆயுதபூஜை கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தொழில், வர்த்தகத்தில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், கருவிகள் உள்ளிட்ட உபகரணங்களை சுத்தப்படுத்தி, அலங்கரித்து, அவற்றுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
இந்துக்களின் முக்கிய விழாக்களில் ஒன்றான நவராத்திரி விழா, இந்த ஆண்டு கடந்த 11-ம் தேதி தொடங்கி வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் 9-வது நாளான இன்று ஆயுதபூஜை என்றும் சரஸ்வதி பூஜை என்றும் அழைக்கப்படும் விழா கொண்டாடப்படுகிறது.
தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், கருவிகள் உள்ளிட்ட சாதனங்களுக்கு மலர் அலங்காரம் செய்து, பூஜைகள் நடத்தப்பட்டன. கல்வி, கலை மற்றும் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அனைத்து இடங்களிலும் கல்விக் கடவுளான சரஸ்வதிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இனிப்புகள், பொரி, சுண்டல் ஆகியவை வழங்கப்பட்டன.
கல்வி நிறுவனங்களில் கலைவாணியின் திருவுருவப் படத்தின் முன்பு புத்தகங்களை வைத்து வழிபட்டனர். அதன் முன்பாக வாழை இலை விரித்து, சர்க்கரைப் பொங்கல், சுண்டல், அவல், பொரி, கடலை மற்றும் பழங்களை நைவேத்தியமாகப் படைத்தனர். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்று சரஸ்வதி பூஜை நடத்தினர். பொதுமக்கள் தங்கள் சொந்த வாகனங்களை கழுவி சுத்தப்படுத்தி, அவற்றுக்கும் பூஜை செய்து வருகின்றனர். ஆயுதபூஜையை முன்னிட்டு கோயில்களிலும் சிறப்பு தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருவண்ணாமலை, திருச்செந்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் பெரிய கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. வழக்கமான வழிபாடுகளுடன், பல்வேறு இடங்களிலும் மக்கள் உற்சாகமாக விழாவைக் கொண்டாடி வருகின்றனர்.













