
புதுடெல்லி: அக். 19
டெல்லியில் நடைபெறும் ராம்லீலா பண்டிகையில், 30 அடி உயரம் கொண்ட ‘கரப்பான் பூச்சி’ உருவ பொம்மையை எரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தசரா பண்டிகையையொட்டி ராவணன், கும்பகர்ணன், மேகநாதன் ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, அவற்றுடன் கரப்பான் பூச்சி உருவ பொம்மையையும் எரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வடமேற்கு டெல்லியின் பிதாம்புரா பகுதியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்ச்சியை நடத்தி வரும் ‘ஸ்ரீ கேசவ் ராம் லீலா கமிட்டி’ இந்த முடிவை எடுத்துள்ளது. விழா ஏற்பாட்டாளர்களின் இந்த முடிவு டெல்லி அரசியல் சூழலில் கவனத்தை ஈர்த்துள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக, படித்த இளைஞர்கள் தலைமையிலான கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சி.ஜே.பி.) டெல்லியில் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது. இதன் காரணமாக, கரப்பான் பூச்சி தற்போது ஆளும் அரசியல் கட்சிகளுக்கு எதிரான எதிர்ப்பின் அடையாளமாக மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது. ராம்லீலா விழா கமிட்டியின் தலைவரும், பா.ஜனதா எம்.எல்.ஏ.-வுமான அசோக் கோயல் கூறுகையில், பொதுமக்களிடையே தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்திலேயே அசுரர்களின் உருவ பொம்மைகள் இடம்பெறும் அணிவகுப்பில் கரப்பான் பூச்சி உருவத்தைச் சேர்த்து எரிக்க முடிவு செய்ததாகத் தெரிவித்தார். எனினும், டெல்லியில் தற்போது அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை கேலி செய்யும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறதா என சமூக வலைத்தளங்களில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். கரப்பான் பூச்சி உருவ பொம்மையை எரிக்கும் முடிவு, தூய்மை விழிப்புணர்வு நடவடிக்கையா அல்லது அரசியல் எதிர்ப்பைச் சுட்டிக்காட்டும் நிகழ்வா என்ற விவாதமும் எழுந்துள்ளது.














