Home மாவட்டங்கள் சென்னை மக்களுக்கு பாதிப்பு வரக்கூடாது: முதல்வர் உத்தரவு

மக்களுக்கு பாதிப்பு வரக்கூடாது: முதல்வர் உத்தரவு

சென்னை, அக். 19-
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மழை, வெள்ளத்தால் பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டார். சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து இன்றும் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, மழை மற்றும் வெள்ளத்தை சமாளிப்பதற்கான முன்னேற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் நேற்று ஆலோசனை நடத்தினார்.கூட்டத்தில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ், வெங்கட ரமணன், ராஜ்மோகன், ரமேஷ், தலைமைச் செயலர் சாய்குமார், அரசு கூடுதல் தலைமைச் செயலர்கள் ககன் தீப் சிங், ராஜேஷ் லக்கானி, சந்திரமோகன், டிஜிபி மகேஷ் குமார் அகர்வால், மாநகராட்சி ஆணையர் சமீரன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். சென்னை பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழைநீர் தேக்கம், மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகளின் நிலவரம், மருத்துவ முகாம்கள் அமைத்தல், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைப்பது, அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது குறித்து முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். மண்டல வாரியாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். பொதுமக்களுக்கு மழை, வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டார். முன்னதாக கட்டுப்பாட்டு அறைக்குச் சென்ற அவர், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்கள் மற்றும் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.