
புதுடில்லி, அக். 19-
புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகள் குறைந்த விலையில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், 137 மருந்துகளை விலை கட்டுப்பாட்டு பட்டியலில் புதிதாக சேர்த்து, அவற்றின் லாப வரம்பை 30 சதவீதமாக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சிகிச்சைக்கான மருந்துகளை வாங்குவது நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் பெரும் பொருளாதார சுமையாக உள்ளது. குறைந்த செலவில் தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய, மருந்துகளின் விலையை குறைக்க மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அத்தியாவசிய மருந்துகளின் விலையை கட்டுப்படுத்த, மத்திய அரசு தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்தப் பட்டியலில் இடம்பெறும் மருந்துகளுக்கு தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் விலை கட்டுப்பாடுகளை விதிக்கிறது. பட்டியலில் நேரடியாக இடம்பெறாத சில மருந்துகளின் விலையையும் அரசு கட்டுப்படுத்தி வருகிறது. இந்நிலையில், சில புற்றுநோய் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் இரண்டு முதல் ஏழு மடங்கு வரை கூடுதல் லாபம் வைத்து மருந்துகளை விற்பதை சுகாதாரத் துறை நிபுணர் குழு கண்டறிந்தது. இதையடுத்து, நிவோலுமாப், ஒலாபரிப், டெனோசுமாப் உள்ளிட்ட 137 முக்கிய புற்றுநோய் மருந்துகள் விலை கட்டுப்பாட்டு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம், இம்மருந்துகளின் அதிகபட்ச சில்லரை விலை 70 சதவீதம் வரை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிய விலை குறைப்பு நவம்பர் 9-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மருந்து நிறுவனங்கள் ஏழு நாட்களுக்குள் திருத்தப்பட்ட விலைப் பட்டியலை இணையதளத்தில் வெளியிடவும், அனைத்து மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களுக்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.புற்றுநோய் மருந்துகள் பெரும்பாலும் மருத்துவமனைகள் வழியாக வழங்கப்படுவதால், புதிய விலையில் அவை விற்கப்படுகிறதா என்பதை மாநில மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மருந்துத் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் வழக்கமான உற்பத்தியை தொடர வேண்டும் என்றும், விதிகளை மீறி கூடுதல் விலைக்கு விற்றால் அந்தத் தொகை வட்டியுடன் வசூலிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.













