
சென்னை, அக். 19-
ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகள் கண்காணிக்கப்படுகிறார்களா எனக் கேள்வி எழுப்பியுள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், காவல்துறை அலட்சியத்தால் கொலைகள் தொடர்வதாகவும், தமிழ்நாடு போதைப்பொருள் உற்பத்தி மையமாகி வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு, காவல் நிலையத்தில் ஜாமின் கையெழுத்திட்டுவிட்டு வந்த ஒருவர், தனது மனைவி கண்முன்னே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அப்போது, “ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகள் கண்காணிக்கப்படுகிறார்களா, இல்லையா?” எனக் கேள்வி எழுப்பியிருந்தேன். அவ்வாறு உருப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதில்லை என்பதை சிவகங்கையில் நடந்த மற்றொரு கொலைச் சம்பவம் காட்டுகிறது. கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்த மதன் என்ற ரவுடி, ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது முழுக்க முழுக்க காவல்துறையின் அலட்சியத்தால் நடந்த கொலை. பெருந்துறை அருகே செவிலியர் ஒருவர் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 5 நாட்களுக்குப் பிறகே அவரது சடலம் கண்டறியப்பட்டுள்ளது.














