
புதுடெல்லி, அக். 19-
இந்திய கல்வி முறை அனைவரையும் உள்ளடக்கியதாக இல்லை என்றும், லட்சக்கணக்கான மாணவர்களை வெளியேற்றும் வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மாணவர்கள் சிலருடன் ராகுல் காந்தி கலந்துரையாடும் காணொலி, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது: “நாட்டில் நிலவும் கல்வி முறை நம்பிக்கை அளிக்கக்கூடியதாக இல்லை. அது அனைவரையும் உள்ளடக்கியதும் அல்ல. உங்களிடம் பணமும் அதிகாரமும் இல்லாவிட்டால் அல்லது ஆங்கிலம் பேசத் தெரியாவிட்டால், எந்தவித மறுபரிசீலனையும் இன்றி இந்த அமைப்பு உங்களை வெளியே தள்ளிவிடும். “இதை நீங்கள் கல்வி முறை என்று அழைக்க முடியாது. இது விலக்கி வைக்கும் ஓர் அமைப்பு. லட்சக்கணக்கான இளைஞர்களை வெளியே வைத்திருக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ‘மாணவர்களின் குரல்’ என்ற நிகழ்ச்சி மூலம் ராகுல் காந்தி மாணவர்களைச் சந்தித்து வருகிறார். மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அவர்கள் விரும்பும் தீர்வுகள் ஆகியவை குறித்து இந்த நிகழ்ச்சியில் கலந்துரையாடப்படுகிறது. இதுவரை கோட்டா, டேராடூன், பிரயாக்ராஜ், புனே, இந்தூர் ஆகிய நகரங்களில் ‘மாணவர்களின் குரல்’ நிகழ்ச்சியை ராகுல் காந்தி நடத்தியுள்ளார். சமீபத்தில் சென்னையிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.













