
ரியாத், அக். 1-
சவுதி அரேபியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள தபூக் நகரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய விமானி சுமித் மச்சாரின் உடல்நிலை சீராக இருப்பதாக சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. காயங்களில் இருந்து அவர் விரைவில் குணமடைவார் என்றும் தூதரகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. துபாயில் இருந்து 180 பயணிகளுடன் இஸ்ரேலுக்குச் சென்ற விமானத்தை கடத்த முயன்ற துணை விமானியின் நடவடிக்கையை இந்திய விமானி முறியடித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தியால் குத்தப்பட்ட நிலையிலும் அவர் துணிச்சலுடன் போராடி விமானத்தை மீட்டதாகவும், அவரது நடவடிக்கையால் விமானத்தில் இருந்த அனைவரும் காப்பாற்றப்பட்டதாகவும் பயணிகள் தெரிவித்தனர். இதையடுத்து காயமடைந்த விமானி சவுதி அரேபியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தபூக்கிற்கு திருப்பிவிடப்பட்ட ப்ளைதுபாய் விமானத்தின் கடத்தல் முயற்சியை துணிச்சலுடன் செயல்பட்டு தடுத்த இந்திய விமானி சுமித் மச்சாரின் உடல்நிலையை ரியாத்தில் உள்ள இந்திய தூதரகமும், ஜித்தாவில் உள்ள துணைத் தூதரகமும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. தபூக் நகரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அவரது உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் காயங்களில் இருந்து விரைவில் குணமடைவார் என்று நம்புகிறோம். அவரது குடும்பத்தினருடன் தூதரக அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர். சவுதி அதிகாரிகளுடன் இணைந்து அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணிப்பதுடன், அவரது நல்வாழ்வுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவோம் என குடும்பத்தினருக்கு உறுதியளித்துள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.















