
சித்ரதுர்கா: அக். 15-
இளைஞரின் விருப்பத்திற்கு மாறாக அவருக்கு ரகசிய உறுப்பு அறுவை சிகிச்சை செய்த இரண்டு திருநங்கைகளை நகர் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் புத்தநகரைச் சேர்ந்த அனுஷ்கா மற்றும் நளினா ஆவர். சள்ளக்கீரை கேட் பகுதியில் சுற்றித்திரிந்தபோது இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
சித்ரதுர்காவில் பூ வியாபாரம் செய்து வந்த 25 வயது இளைஞருக்கு, பூ கொடுக்கும்போது இரண்டு திருநங்கைகளுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இளைஞருடன் ஏற்பட்ட பழக்கத்தைப் பயன்படுத்தி, கடந்த செப்டம்பர் 1-ந் தேதியன்று அவரது விருப்பத்திற்கு மாறாக அறுவை சிகிச்சை செய்ததாகக் கூறப்படுகிறது.அறுவை சிகிச்சை செய்த குற்றச்சாட்டுடன் சேர்த்து, இளைஞரின் தொடைகள் மீது சூடான தண்ணீர் மற்றும் நெருப்பால் சுட்டு சித்ரவதை செய்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. தற்போது அந்த இளைஞர் தனது சொந்த கிராமத்தில் வசித்து வருகிறார்.இது தொடர்பாக கடந்த அக்டோபர் 9-ந் தேதியன்று இளைஞரின் தந்தை பரசுராமபுரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சித்ரதுர்கா நகர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
வழக்கின் விசாரணையை கையில் எடுத்த சித்ரதுர்கா நகர் காவல் நிலைய போலீசார், இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு திருநங்கைகளைக் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.













