
புதுடெல்லி: அக்.15–-
சுமார் ரூ.500 கோடி மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள் விநியோக ஒப்பந்தத்தின் ரகசியத் தகவல்களை லஞ்சப் பணத்துக்காக கசியவிட்டதாகக் கூறப்படும் புகாரில், மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ) மூன்று பேரை அதிரடியாகக் கைது செய்துள்ளது.
மியூனிஷன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் அனில் குமார், அவரது சகோதரர் பி. ஹர்ஷவர்தன் மற்றும் தனியார் பாதுகாப்பு நிறுவனமான எஸ்.எம்.பி.பி. லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆஷிஷ் கன்சல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக கடந்த அக். 12-ல் எப்ஐஆர் பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள், அடுத்த நாளே மூவரையும் கைது செய்தனர். புனே, மைசூரு, பெங்களூரு மற்றும் டெல்லி ஆகிய நான்கு நகரங்களில் உள்ள தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.2.23 கோடி ரொக்கமும், முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் பணப்பரிமாற்றம் மற்றும் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது.













