
புதுடெல்லி: அக்.15–-
மதமாற்றம் செய்தவர்களுக்கு இட ஒதுக்கீடு பலன்கள் மறுக்கப்படும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
குறிப்பிட்ட இந்து சமூகங்களிலிருந்து இஸ்லாம மதத்திற்கு மாறியவர்களுக்குப் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான (பிசிஎம்) இட ஒதுக்கீடு பலன்களை நீட்டிக்கும் தமிழக அரசின் முடிவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.மாநில அரசின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், ஒரு நபர் மதம் மாறுவதால் அவருடைய சாதிப் பின்னணியுடன் தொடர்புடைய சமூக மற்றும் கல்வி ரீதியான பின்தங்கிய நிலை மறைந்துவிடாது என்ற வாதத்தை ஏற்க மறுத்துவிட்டது. ஏற்கெனவே இட ஒதுக்கீடு பலன்களைப் பெற்றவர்கள் இஸ்லாம மதத்தைத் தழுவினர் என்ற ஒரே காரணத்திற்காக அந்தப் பலன்களை இழக்கக் கூடாது என்பதே தமிழக அரசின் கொள்கையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மதம் மாறினால் இட ஒதுக்கீட்டு பலன்கள் கிடைக்காது என்பதை உறுதி செய்துள்ள உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தமிழக அரசின் நடவடிக்கைக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது அதேசமயம் இது அகில இந்திய அளவில் மிகவும் தீவிரமாக உற்று நோக்கும ஒரு உத்தரவாக அமைந்துள்ளது.நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், “இந்து சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் இஸ்லாத்துக்கு மதம் மாறுவதால் அவர் தானாகவே இஸ்லாமிய சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் இடம்பெற முடியாது.
தமிழக அரசு பிறப்பித்த இந்த உத்தரவு, இட ஒதுக்கீட்டுச் சலுகைகளைப் பெறுவதற்காக ஒரு செயற்கையான பிரிவினரை உருவாக்குவதாக உள்ளது. இந்து சமூக அமைப்பில் இருந்து இந்து அல்லாத சமூக அமைப்புக்கு மதம் மாறிய ஒருவர், இத்தகைய இடஒதுக்கீட்டுச் சலுகையைக் கோர முடியாது.” என தீர்ப்பளித்தனர்.













