
புதுடெல்லி: அக்.15–-
இந்தியாவில் மொபைல் போன் பயனர்களுக்கு இனிமேல் தெரியாத எண்களிலிருந்து அழைப்புகள் வருவது முற்றிலும் தவிர்க்கப்படவுள்ளது; ஏனெனில் மத்திய அரசு அழைப்பாளர் அடையாள வசதியை கட்டாயமாக்கியுள்ள நிலையில், தொலைத்தொடர்புத் துறை அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கும் வருகிற நவம்பர் 1, 2026 முதல் அழைப்பாளர் பெயர் விளக்கக் காட்சியை அறிமுகப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளதுடன், இது இந்தியாவின் சரிபார்க்கப்பட்ட அழைப்பாளர் அடையாள அமைப்பாகும் என்றும், இதன் மூலம் போன் கால் வரும்போது அழைப்பவரின் எண்ணுடன் அவர்களின் பெயரும் திரையில் தோன்றும் என்றும் தெரிவித்துள்ளது.
தொலைத்தொடர்புத் துறை உத்தரவின்படி, 4ஜி மற்றும் 5ஜி போன்ற உயர் தலைமுறை நெட்வொர்க்குகளுடன் இணைக்கப்பட்ட அனைத்து பயனர்களுக்கும் இந்த வசதி இயல்பு நிலையிலேயே செயல்படுத்தப்படும் என்றும், 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க்குகள் மற்றும் பொதுவான தொலைபேசி வலையமைப்புகளில் இதை நடைமுறைப்படுத்துவது குறித்து பின்னர் பரிசீலிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வசதியானது எவ்வாறு வேலை செய்யும் என்றால், ஒரு அழைப்பு வரும்போது திரையின் முதல் பகுதியில் அழைப்பாளரின் எண்ணும், இரண்டாவது பகுதியில் பெறுநரின் தொலைபேசிப் பட்டியலில் சேமிக்கப்பட்ட பெயரும் காண்பிக்கப்படும்; ஒருவேளை அந்த எண் சேமிக்கப்படவில்லை என்றால் உள்நாட்டு அழைப்புகளுக்கு மூலத் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தரவுத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட பெயர் காண்பிக்கப்படும் என்றும், சர்வதேச அழைப்புகளுக்கு “சர்வதேச அழைப்பு” என்று திரையில் தோன்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தொலைத்தொடர்பு சேவை வழங்குநரும் சந்தாதாரர்களின் பெயர்களை அவர்களின் எண்களுடன் இணைக்கும் தரவுத்தளத்தை ஏற்படுத்தி பராமரிக்க வேண்டும் என்றும், அழைப்பைப் பெறும் நிறுவனம் அந்த தரவுத்தளத்திலிருந்து பெயரை மீட்டெடுத்து அழைப்பைப் பெறுபவருக்குக் காண்பிக்க வேண்டும் என்றும் இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.













