Home செய்திகள் தேசிய செய்திகள் இ-சலான் அபராதம் வசூலிக்க புதிய யோசனைஉச்ச நீதிமன்றம்:

இ-சலான் அபராதம் வசூலிக்க புதிய யோசனைஉச்ச நீதிமன்றம்:

புதுடெல்லி, செப். 29-
சாலை போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு மின்னணு முறையில் அபராதம் விதிப்பது மட்டும் போதாது என்றும், அந்த அபராதத் தொகையை அவர்களிடம் இருந்து கறாராக வசூலிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு ‘இ-சலான்’ எனப்படும் மின்னணு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால், பெரும்பாலான வாகன ஓட்டிகள் அபராதத் தொகையை உடனடியாக செலுத்துவதில்லை. இதனால், வசூலிக்கப்படாமல் நிலுவையில் இருக்கும் அபராதத் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நாடு முழுவதும் சுமார் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான ‘இ-சலான்’ அபராதங்கள் வசூலிக்கப்படாமல் தேங்கியுள்ளதாக மத்திய, மாநில அரசுகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், நாடு முழுவதும் போக்குவரத்து போலீசார் லட்சக்கணக்கான ‘இ-சலான்’களை வழங்கி வருகின்றனர். அவற்றை வழங்குவது மட்டுமல்லாமல், அபராதத் தொகையை கறாராக வசூலிப்பதற்கான நடவடிக்கைகளும் முக்கியம் என்று குறிப்பிட்டனர். மேலும், போக்குவரத்து அபராதங்களை வாகன ஓட்டிகள் செலுத்தாவிட்டால், அந்தத் தொகையை சம்பந்தப்பட்ட வாகன ஓட்டியின் வீட்டு மின் கட்டணத்துடன் சேர்க்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.