Home செய்திகள் தேசிய செய்திகள் மசூதி இடிப்புக்கு எதிர்ப்பு: 10 பேர் கைது

மசூதி இடிப்புக்கு எதிர்ப்பு: 10 பேர் கைது

உஜ்ஜைன்: செப். 29-
மத்தியப் பிரதேசத்தில் 2028-ம் ஆண்டு கும்பமேளா நடைபெற உள்ளது. இதையொட்டி, உஜ்ஜைன் நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் ரூ.9.8 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளுக்கு உஜ்ஜைன் நகரில் உள்ள ஷாஹி மசூதியின் ஒரு பகுதி இடையூறாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மசூதியின் ஒரு பகுதியை இடிப்பதற்கு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதிகாரிகள் மசூதியை இடிக்கத் தயாரான நிலையில், நேற்று காலை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அங்கு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின்போது சில இடங்களில் கல் வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. போராட்டக்காரர்களைக் கலைக்க போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இந்த வன்முறை தொடர்பாக 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதனிடையே, சாலை விரிவாக்கத்துக்காக உஜ்ஜைனில் உள்ள தனது பூர்வீக வீட்டின் ஒரு பகுதியை மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தானே கடப்பாரையால் இடித்து அகற்றினார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நகரின் வளர்ச்சி என்று வரும்போது, நாம் முதலில் முன்மாதிரியாக இருக்க வேண்டும்” என்றார்.
மசூதியின் ஒரு பகுதி சாலை விரிவாக்கப் பணிகளுக்கு இடையூறாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்த நிலையில், அதனை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் கல் வீச்சு நடந்ததாகவும், அதைத் தொடர்ந்து போலீஸார் நடவடிக்கை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.