
பெங்களூரு: செப். 29-
பெங்களூரு மல்லேஸ்வரத்தில் நேற்று இரவு பெய்த பலத்த மழைக்கு ராட்சத மரம் ஒன்று திடீரென வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில் அங்கிருந்த 3 வாகனங்கள் பலத்த சேதமடைந்தன.
மல்லேஸ்வரம் ரிலையன்ஸ் ஸ்மார்ட் பஜார் எதிரே பாதாள சாக்கடை குழாய் பதிப்பதற்காக ஆழமான பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. இதனால் மரத்தின் வேர்கள் பலமிழந்திருந்த நிலையில், மழைநீரால் மேலும் தளர்ந்து மரம் அப்படியே சரிந்து விழுந்தது.
இந்த விபத்தில் மரத்தின் அடியில் சிக்கிய ஒரு கார் முற்றிலும் நொறுங்கியது. மேலும் ஒரு கேஸ் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனமும் சேதமடைந்தன. மரம் நடுரோட்டில் விழுந்ததால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த ஜி.பி.ஏ (GBA) ஊழியர்கள் மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தைச் சீர்செய்தனர்.
உயிர் தப்பிய உரிமையாளர்:
சேதமடைந்த காரின் உரிமையாளர் வினோத் குமார் கூறுகையில், “நான் தினமும் இரவில் இந்த காரில்தான் தூங்குவேன். நேற்று உறவினர் ஒருவர் இறந்துவிட்டதால் காரை நிறுத்திவிட்டுச் சென்றேன். வழக்கம்போல காரில் தூங்கியிருந்தால் என் உயிர் போயிருக்கும்” என்று கண்ணீருடன் கூறினார்.
மேலும், சாலையில் கண்டபடி பள்ளம் தோண்டி மரத்தின் வேர்களைப் பலவீனப்படுத்தியதே மரம் விழக் காரணம் எனச் கூறி ஜி.பி.ஏ அதிகாரிகள் மீது அவர் கடும் ஆத்திரத்தை வெளிப்படுத்தினார்.
நகரில் தொடர் மழை பெய்து வருவதால் மரங்கள் மற்றும் கிளைகள் முறிந்து விழ வாய்ப்புள்ளது என்றும், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் எச்சரிக்கையுடன் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.













