Home செய்திகள் தேசிய செய்திகள் ரேவந்த் ரெட்டி பேச்சால் சர்ச்சை

ரேவந்த் ரெட்டி பேச்சால் சர்ச்சை

புதுடெல்லி: செப். 29-
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல பாஜக தலைவர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிடுவதைப் பார்த்துள்ளோம்; ஆனால், அவர்கள் எப்போதாவது ‘ஹர ஹர மகாதேவ்’ என்று முழக்கமிட்டதைப் பார்த்திருக்கிறோமா? அதன் பின்னணி என்ன தெரியுமா? என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பேசிய ரேவந்த் ரெட்டி, “நாங்கள் திராவிடர்கள். எங்களுக்கென தனிப்பட்ட மரபுகளும், நம்பிக்கைகளும் உள்ளன. நாங்கள் சிவபெருமானின் பக்தர்கள். ஆனால், பாஜக-வினர் தங்களை ராமபிரானின் பக்தர்களாக அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்” என்றார்.
மேலும் அவர், “ராமபிரானை பாஜக-வினர் அரசியல் ரீதியாக அடையாளப்படுத்தி வருகின்றனர். இது உணர்ச்சி சார்ந்தது. பிரதமர் மோடி மற்றும் பல பாஜக தலைவர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிடுவதை நாம் கண்டுள்ளோம். ஆனால், அவர்கள் எப்போதாவது ‘ஹர ஹர மகாதேவ்’ என்று முழக்கமிடுவதைப் பார்த்துள்ளோமா? அதை அவர்கள் விரும்புவதுகூட இல்லை.
சிவபெருமான் ஏழைகளின் கடவுள். ராமபிரான் பணம் படைத்தவர்களின் கடவுள். பாஜக பணம் படைத்தவர்களுக்கான கட்சி. இதுதான் இதன் பின்னணியில் உள்ள தர்க்கம்” என்று தெரிவித்தார்.
இதற்கு மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “இஸ்லாமியர்கள் என்றால் காங்கிரஸ், காங்கிரஸ் என்றால் இஸ்லாமியர்கள் என்று பேசி வந்த காங்கிரஸ் கட்சியின் ரேவந்த் ரெட்டி, இப்போது இந்து கடவுள் குறித்து பேசியுள்ளார். சிவன் மற்றும் ராமர் குறித்து அவர் தெரிவித்த கருத்து, வடக்கு மற்றும் தெற்குக்கு இடையே அரசியல் ரீதியான பிளவை ஏற்படுத்துகிறது” என்றார். மேலும், “பிரதமர் மோடியின் தொகுதி வாரணாசி. அந்தப் பகுதியின் ஆன்மிக அடையாளம் காசி விஸ்வநாதர். பல்வேறு காலகட்டங்களில் பிரதமர் மோடியும் பாஜக-வினரும் தங்களை சிவபெருமானுடன் தொடர்புபடுத்திக் கொண்டுள்ளனர். ஆனால், ரேவந்த் ரெட்டி பிளவு அரசியலில் ஈடுபடுகிறார்” என்றும் பண்டி சஞ்சய் குமார் குற்றஞ்சாட்டினார்.