Home மாவட்டங்கள் பெங்களூர் தொழிலாளியை கொன்ற ஒற்றை யானை காட்டுக்குள் விரட்டியடிப்பு

தொழிலாளியை கொன்ற ஒற்றை யானை காட்டுக்குள் விரட்டியடிப்பு

பெங்களூரு: செப். 29-
பெங்களூரு கெங்கேரி அருகே கூலித் தொழிலாளியை கொடூரமாக மிதித்துக் கொன்ற ஒற்றை காட்டுயானையை, அஞ்சாமல் போராடி பன்னேருகட்டா வனப்பகுதிக்குள் வனத்துறை அதிகாரிகள் வெற்றிகரமாக விரட்டியடித்தனர்.
கெங்கேரி அருகே உள்ள ஆர்.ஆர். மருத்துவக் கல்லூரி பின்பகுதியில், நேற்று அதிகாலை நாகராஜ் என்ற கூலித் தொழிலாளி வழக்கம் போல் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கு திடீரென பிரத்தியட்சமான ஒற்றை காட்டுயானை, நாகராஜை கொடூரமாகத் தாக்கி மிதித்துக் கொன்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது.
தகவலறிந்த வனத்துறை அதிகாரிகள் உடனடி களத்தில் இறங்கினர். பி.எம். காவலு காப்புக்காடு பகுதிக்குள் மறைந்திருந்த அந்த ஒற்றை யானையைக் கண்டுபிடிக்க 2 ‘தெர்மல் ட்ரோன்’ கேமராக்கள் மற்றும் டி.சி.எஃப். சக்ரபாணி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் நள்ளிரவு வேட்டையில் ஈடுபட்டனர்.
அதனடிப்படையில், பி.எம். காவலு வனப்பகுதியிலிருந்து டி.கே. ஃபாரஸ்ட் யானை வழித்தடம் வழியாகச் சுற்றி வளைத்து, அந்த யானையை வெற்றிகரமாகப் பன்னேருகட்டா வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதனால் பொதுமக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.