
நாக்பூர், அக். 19-
சொந்தக் கட்சியான சிவசேனாவுக்குள்ளேயே ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தடுக்க முடியாத உத்தவ் தாக்கரே, நாட்டில் ஆட்சி மாற்றம் குறித்து பேசுவது வேடிக்கையாக உள்ளது என்று மகாராஷ்டிர முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் விமர்சித்தார். சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) தலைவர் உத்தவ் தாக்கரே சமீபத்தில் கூறும்போது, “ஓர் அரசு மக்களின் உரிமைகளைப் பறித்தால், அந்த அரசை மாற்றுவது கட்டாயம்” என்று தெரிவித்திருந்தார். இதுகுறித்து நாக்பூரில் நேற்று தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது: சொந்தக் கட்சிக்குள்ளேயே ஆட்சி மாற்றத்தை உத்தவ் தாக்கரேவால் தடுக்க முடியவில்லை. இந்நிலையில், மத்தியில் ஆட்சி மாற்றம் குறித்து அவர் பேசுவது வேடிக்கையாக உள்ளது. பால்தாக்கரேயின் இந்துத்துவக் கொள்கையை உத்தவ் தாக்கரே கைவிட்டுவிட்டார். இதன் காரணமாகவே சிவசேனாவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் மூலமாக மட்டுமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும். போராட்டங்கள் மூலம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. வரும் 2029-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெறும். நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகப் பதவியேற்பார். நேபாளம், வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளைப் போன்று இந்தியாவிலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று சிலர் கனவு காண்கின்றனர். அவர்களின் கனவு ஒருபோதும் பலிக்காது. இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.













