
சென்னை: நவ.4-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 10 வகையான காய்கறிகள் அடங்கிய ‘வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு’ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அன்றாட சமையலுக்குத் தேவையான காய்கறிகளை நுகர்வோருக்கு நியாயமான விலையில் வழங்கும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, ஒரு காய்கறித் தொகுப்பு ரூ.100 என்ற சலுகை விலையில் நாளை (வியாழக்கிழமை) முதல் 7-ம் தேதி வரை 3 நாட்களுக்கு விற்பனை செய்யப்படும்.
கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலைகள் மற்றும் கூட்டுறவுப் பண்டகசாலைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட 218 விற்பனை நிலையங்கள் வாயிலாகவும், சென்னையில் மட்டும் செயல்படும் 4 நடமாடும் காய்கறிக் கடைகள் வாயிலாகவும் தொகுப்புகள் விற்பனை செய்யப்பட உள்ளன.
ஒரு தொகுப்புக்கு ரூ.100 மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும், கூடுதலாகவோ குறைவாகவோ பணம் பெறக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருவருக்கு ஒரு தொகுப்பு மட்டுமே வழங்க வேண்டும். தொகுப்பில் இடம்பெறும் 10 வகையான காய்கறிகளின் கொள்முதல் விலையை குழு நிர்ணயிக்கும். மேலும், ஒரு தொகுப்புக்கு ரூ.2.50 வீதம் சுற்றுச்சூழலுக்கு உகந்த பைக்கான செலவும் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்தத் தொகுப்பில் பெரிய வெங்காயம் 500 கிராம், தக்காளி 500 கிராம், கத்தரிக்காய் 250 கிராம், உருளைக்கிழங்கு 250 கிராம், கேரட் 200 கிராம், பீன்ஸ் 200 கிராம், பச்சை மிளகாய் 100 கிராம், எலுமிச்சை 100 கிராம், இஞ்சி 50 கிராம் மற்றும் 400 முதல் 450 கிராம் எடையுள்ள தேங்காய் ஆகியவை இடம்பெறும்.
ொள்முதல் விலை, அரசால் நிர்ணயிக்கப்பட்ட ரூ.100 விற்பனை விலை, விநியோகத் தொகை மற்றும் கூட்டுறவு கல்வி நிதிக்கான ரூ.2.50 ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.













