
சென்னை: நவ.4-
சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது மனைவியுடன் முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டியில் பயணம் செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
ரயில்வே வணிகக் கையேட்டில், படுக்கை வசதியை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற விதி உள்ளது. இதன் காரணமாக, குறிப்பிட்ட நேரத்துக்கு அப்பாலும் தனது மனைவி படுக்கை வசதியைப் பயன்படுத்த சக பயணிகள் அனுமதிக்கவில்லை என மனுதாரர் கூறியுள்ளார்.
இதனால், தனது மனைவி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அவதியடைந்ததாகவும், எனவே ரயில்வே வணிகக் கையேட்டில் உள்ள படுக்கை வசதி தொடர்பான விதிகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தனிப்பட்ட ஒரு சம்பவத்தை காரணம் காட்டி, அனைத்து பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் கொண்டு வந்துள்ள விதிகளை ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்தனர்.
அதே நேரத்தில், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு, படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் அவர்களுக்கான வசதிகள் முறையாகக் கிடைப்பதை ரயில்வே நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்றும் அமர்வு உத்தரவிட்டது.
மேலும், மனுதாரர் ஏற்கெனவே புகார் அளித்திருந்தால், அதன் மீது மேல்நடவடிக்கை எடுக்கும்படி ரயில்வே நிர்வாகத்தைக் கோரலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.













