
அபுதாபி, அக். 7-
ஃபிளை துபாய் விமானக் கடத்தல் முயற்சி தொடர்பாக, ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை பைலட் ஹமாம் அல் ஹமாமியிடம் ஐக்கிய அரபு அமீரக சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் வெளியாகிய தகவலின்படி, அவசரகால பயன்பாட்டுக்கான கோடாரியால் இந்திய பைலட் ஸ்மித் மச்சாரின் பின்னந்தலையில் துணை பைலட் திடீரென தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் நிலைகுலைந்து கீழே விழுந்த ஸ்மித் மச்சாரின் மண்டை ஓடு உடைந்தது. மேலும், எலும்புத் துண்டு ஒன்று அவரது மூளையில் பதிந்ததாகவும் புலனாய்வுக் குழு வட்டாரங்கள் தெரிவித்தன. ஃபிளை துபாய் விமானம் சவுதி அரேபியாவின் தபூக் நகரில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் மண்டை ஓடு உடைந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவருக்கு தலையில் அவசர அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, மூளையில் பதிந்திருந்த எலும்புத் துண்டு அகற்றப்பட்டது. பைலட் ஸ்மித் மச்சாரின் கை, கால்கள், மார்பு மற்றும் மேல்வயிற்றுப் பகுதிகளிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அபுதாபியில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை வேகமாகத் தேறி வருவதாக அதிகாரிகள் கூறினர். இதற்கிடையே, அபுதாபியில் உள்ள ரகசிய இடத்தில் ஹமாம் அல் ஹமாமியிடம் விசாரணை நடைபெற்று வருவதாக இஸ்ரேலின் உளவுத் துறை மொசாத் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விசாரணையில் பங்கேற்க இஸ்ரேல் கேபினட் திங்கள்கிழமை ஒப்புதல் அளித்ததாகவும், அதன்படி மொசாத் சிறப்பு நிபுணர்கள் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளுடன் இணைந்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது.
















