Home செய்திகள் தேசிய செய்திகள் சபரிமலையில் போக்குவரத்து பிரச்சினையால் பக்தர்கள் மறியல்

சபரிமலையில் போக்குவரத்து பிரச்சினையால் பக்தர்கள் மறியல்

சபரிமலை, அக். 19-
சபரிமலை ஐயப்பன் கோயிலில் துலாம் மாத (ஐப்பசி மாத தொடக்கம்) பூஜைக்காக நடை திறக்கப்பட்ட முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை, போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாததால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர் விடுமுறை காரணமாக ஐயப்பனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்திருந்தனர்.
நிலக்கல்–பம்பை வழித்தடத்தில் போதிய கேரள அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை என பக்தர்கள் குற்றம்சாட்டினர். அந்தப் பகுதியில் சாலை சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் பேருந்துகள் குறைவாக இயக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
நீண்ட நேரம் பேருந்துக்காக காத்திருந்த பக்தர்கள், ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மறியலைக் கலைத்தனர். கோயிலிலும் அதிகளவில் பக்தர்கள் திரண்டதால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.ஏற்கெனவே கூட்ட நெரிசலுக்கு இடையே சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள், திரும்பிச் செல்ல பேருந்துகள் கிடைக்காததால் மேலும் அதிருப்தியடைந்தனர். நிலக்கல்–பம்பை சாலையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல் அட்டோடு வரை நீடித்தது.
அந்த வழியில் ஏற்பட்ட ஒரு விபத்தும் நெரிசலுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இதனால் தரிசனம் முடித்த பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஐப்பசி மாத பூஜையின் முதல் மூன்று நாட்களுக்கு ஆன்லைனில் 1.5 லட்சத்துக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாட்களில் மட்டும் தலா 60 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருந்தனர். இதனால் ஸ்பாட் புக்கிங் மூலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.