
புதுடெல்லி, அக். 15-
பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதற்காக, கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு (சிஜேபி) அமெரிக்காவில் இருந்து நன்கொடை வழங்கப்படுவதாக அந்நாட்டின் பிரபல பாடகி மேரி மில்பென் குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக இந்தியா கூட்டணியும், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியும் நடத்தி வரும் போராட்டங்களின் பின்னணியில் வெளிநாட்டு சதி இருப்பதாக பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், சிஜேபிக்கு அமெரிக்காவைச் சேர்ந்த சிலர் நிதி அளிப்பதாக மேரி மில்பென் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட நன்கொடையாளர்கள், தாங்கள் இலக்காகக் கொண்ட நாடுகளில் குழப்பத்தையும் அமைதியின்மையையும் ஏற்படுத்துவதற்காக ஒரு நடைமுறையைப் பின்பற்றி வருகின்றனர்.
முதலில், அவர்கள் பழமைவாத உலகத் தலைவர்களைக் குறிவைப்பார்கள். பின்னர், அந்த நாட்டைச் சேர்ந்தவரும் அமெரிக்காவில் கல்வி கற்றவருமான ஒருவரைத் தேர்வு செய்து, அவரைத் தீவிரப்படுத்துவார்கள். அதன் பிறகு, அவரை மீண்டும் அந்த நாட்டுக்கு அனுப்பி, குழப்பத்தையும் அழிவையும் ஏற்படுத்த நிதியளிப்பார்கள். இத்தகைய சதித் திட்டங்கள் பெரும்பாலும் தோல்வியடைந்தாலும், அவை சம்பந்தப்பட்ட நாடுகளின் வளர்ச்சியிலும் நிர்வாகத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவின் ஆட்சியைச் சீர்குலைக்க வெளிநாட்டு சக்திகள் மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடிக்க இந்தியர்கள் குரல் கொடுக்க வேண்டும். இந்திய இளம் தேசபக்தர்கள் எழுச்சி பெற வேண்டும். இந்திய மண்ணில் பிறந்து, வளர்ந்து, கல்வி கற்ற புதிய குரல்கள் இந்தியாவில் எழ வேண்டும். அவர்கள் ஒன்றிணைந்து, சிஜேபியின் சீர்குலைவு மனப்பான்மைக்கு எதிராக அமைதியான முறையில் போராட வேண்டும். ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாக்க எப்போதும் ஓர் எதிர் இயக்கம் இருக்க வேண்டும் என்றும் மேரி மில்பென் தெரிவித்துள்ளார்.













