Home செய்திகள் தேசிய செய்திகள் சிஜேபி நிர்வாகிகள் விடுதலைக்குப் பிறகு போராட்டம்

சிஜேபி நிர்வாகிகள் விடுதலைக்குப் பிறகு போராட்டம்

புதுடெல்லி, அக். 19-
இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு (எஸ்ஐஆர்) எதிராக டெல்லியில் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) அடுத்தகட்ட போராட்டம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் நிறுவனத் தலைவர் அபிஜித் திப்கே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள தங்கள் அமைப்பின் உறுப்பினர்களான சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் விடுவிக்கப்பட்ட பிறகு, அனைவரும் ஒன்றுகூடி அடுத்தகட்ட போராட்டத்தை நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்றார். “நாங்கள் யாருக்கும் அஞ்சமாட்டோம்; பின்வாங்கவும் மாட்டோம்” என்றும் அபிஜித் திப்கே தெரிவித்தார். அக்டோபர் 16-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு ‘லேரா தோ திரங்கா’ பேரணி நடத்தப்படும் என்று அபிஜித் திப்கே அழைப்பு விடுத்திருந்தார். இந்தப் பேரணியில் பங்கேற்கக் கூடாது என்று டெல்லி காவல் துறை, பேரணி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. எனினும், வெள்ளிக்கிழமை மாலை கன்னாட் பிளேஸ் பகுதிக்குப் புறப்பட்டுச் சென்ற அபிஜித் திப்கேவை காவல் துறையினர் தடுப்புக் காவலில் எடுத்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, சனிக்கிழமை அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. தற்போது சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் நீதிமன்றக் காவலில் இருப்பதாகவும், அவர்கள் விடுதலையான பிறகே அடுத்தகட்ட போராட்டம் தொடர்பான முடிவு எடுக்கப்படும் என்றும் அபிஜித் திப்கே கூறியுள்ளார்.