
சென்னை: அக்.15–-
சென்னை மாநகருக்கு தடையின்றி குடிநீர் வழங்குவதற்காக ரூ.3,108 கோடியில் பிரதான சுற்றுக்குழாய் அமைக்கும் திட்டத்துக்கு முதல்வர் விஜய் அடிக்கல் நாட்டினார். மேலும், வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, பள்ளிக்கரணை மற்றும் ஒக்கியம் மடுவு பகுதிகளில் நடைபெற்றுவரும் வெள்ளத் தடுப்புப் பணிகளையும் அவர் நேரில் ஆய்வு செய்தார்.சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்காக, பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் மற்றும் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் உட்பட 9 குடிநீர் ஆதாரங்கள் உள்ளன. இதன்மூலம் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியம் சென்னையில் உள்ள சுமார் 91 லட்சம் குடும்பங்களுக்கு தினமும் 1,260 மில்லியன் லிட்டர் குடிநீரை வழங்கி வருகிறது. தற்போதுள்ள அமைப்பில் ஒரு நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதனால் பற்றாக்குறை ஏற்படும் பகுதிகளுக்கு, மற்ற ஆதாரங்களில் இருந்து உபரிநீரை மாற்ற முடியாத சூழல் நிலவுகிறது.இதை சரிசெய்யும் விதமாக முந்தைய திமுக ஆட்சியில் ‘பிரதான சுற்றுக்குழாய் திட்டம்’ (ரிங் மெயின் சிஸ்டம்) ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் ரூ.3,108 கோடியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா சோழிங்கநல்லூரில் உள்ள குடிநீரேற்றும் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் விஜய் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகள் முதல்வர் விஜய்க்கு விளக்கம் அளித்தனர்.இந்த ஆய்வின்போது, பருவமழை தீவிரமடைவதற்கு முன்பாக அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். வெள்ளப் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் மீட்பு இயந்திரங்களைத் தயார் நிலையில் வைக்க வேண்டும். நீர்மட்ட உயர்வை இரவு பகலாக கண்காணிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டார். இந்த நிகழ்வுகளில் அமைச்சர்கள் ந.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ப.வெங்கடரமணன், ராஜ்மோகன், நெ.மரிய வில்சன், ரா.குமார், நகராட்சி நிர்வாகத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, நீர்வளத்துறை செயலர் பிரசாந்த் எம். வடநரே, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் த.ஆனந்த், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.













