Home மாவட்டங்கள் சென்னை சென்னையில் ஒரே மாதத்தில்2 ஆயிரம் பேருக்கு டெங்கு

சென்னையில் ஒரே மாதத்தில்2 ஆயிரம் பேருக்கு டெங்கு

சென்னை, அக். 4-
சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் 50 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பாண்டில் இதுவரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, அரசு மருத்துவமனைகளில் டெங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிரத்யேக வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், போதிய மருந்துகளை இருப்பில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், டெங்கு பரவல் இதுவரை கட்டுக்குள் வரவில்லை. சென்னையில் டெங்கு காய்ச்சலின் பரவல் அதிகமாக இருப்பதால், நேற்று மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் 109 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களில் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சென்னை மாநகராட்சி பகுதிகளில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு தேவையான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களை கண்டறியும் பணிகளும் முகாம்கள் மூலம் நடைபெற்று வருகின்றன.