
சென்னை: அக். 30-
சென்னை, பெங்களூரு நகரங்களை இணைக்கும் வகையில் 263 கிலோமீட்டர் நீளத்தில் அதிவிரைவு நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட இத்திட்டத்துக்கு, 2022-ம் ஆண்டு மே மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது சாலை வழியாக சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல 5 முதல் 7 மணி நேரம் ஆகிறது. அதிவிரைவு சாலை பயன்பாட்டுக்கு வந்ததும் பயண நேரம் 3 மணி நேரமாகக் குறையும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
ரூ.18,000 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் இத்திட்டப் பணிகள் 10 தொகுப்புகளாகப் பிரிக்கப்பட்டு தொடங்கப்பட்டன. இதுவரை 230 கிலோமீட்டர் பணிகள் நிறைவடைந்துள்ளன. கர்நாடக மாநில எல்லைக்குள் உள்ள 71 கிலோமீட்டர் நீளமுள்ள ஹோஸ்கோட்டே-பெத்தமங்களா பகுதி முழுமையாக முடிக்கப்பட்டு, போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது. ஆந்திரப் பகுதிகளிலும், தமிழகம்-ஆந்திர எல்லைப் பகுதிகளிலும் 90 சதவீதப் பணிகள் முடிந்துள்ளன.
தமிழகத்தில் உள்ள 106 கிலோமீட்டரில், இதுவரை 92 கிலோமீட்டர் பணிகள் நிறைவடைந்துள்ளன. திட்டம் முதலில் 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. பல்வேறு காரணங்களால் பணிகள் தாமதமானதால், திட்ட மதிப்பீடு ரூ.10,507 கோடியாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மீதமுள்ள 14 கிலோமீட்டர் பணிகள் ரூ.614 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளன. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம், மின்சாரம் மற்றும் குடிநீர் குழாய்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை இடமாற்றம் செய்வதில் இருந்த சிக்கல்கள், சில பகுதிகளில் ஒப்பந்ததாரர்களின் செயல்பாட்டில் ஏற்பட்ட குறைபாடுகள் ஆகியவற்றால் பணிகள் தாமதமானது. அரக்கோணம்-காஞ்சிபுரம் இடையேயான 25 கிலோமீட்டர் பகுதியில் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருந்ததால் தாமதம் ஏற்பட்டது. தற்போது அதில் 11 கிலோமீட்டர் பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள 14 கிலோமீட்டருக்கு ரூ.614 கோடியில் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டு, பணிகள் தொடங்கப்படும். இப்பணிகள் நான்கு மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.













