
சென்னை: அக். 30-
விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது பிறந்தநாள் விழாவும், 64-வது குருபூஜையும் இன்று நடைபெற்று வரும் நிலையில், தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதல் அமைச்சர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தேவர் குருபூஜையில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்துவது வழக்கம்.
இந்த நிகழ்வில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, புஸ்சி ஆனந்த், செங்கோட்டையன் ஆகியோரும் பங்கேற்றனர். அவர்கள் தேவர் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
முதல் அமைச்சர் விஜய் வருகை தருவதை அறிந்து நந்தனத்தில் ஏராளமான மக்கள் திரண்டனர். அங்கு கூடியிருந்த மக்களைப் பார்த்து கை அசைத்தபடி சிறிது தூரம் நடந்து சென்ற முதல் அமைச்சர் விஜய், பின்னர் தனது காரில் ஏறி தலைமைச் செயலகத்துக்குப் புறப்பட்டுச் சென்றார். அவரது வருகையையொட்டி அப்பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.
முன்னதாக, தேவர் ஜெயந்தி விழாவுக்காக முதல் அமைச்சர் விஜய் பசும்பொன் செல்ல இருப்பதாகத் தகவல் வெளியானது. ஆனால், அவரது பயணத் திட்டம் திடீரென மாற்றப்பட்டது. பசும்பொன்னில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவர் குருபூஜை நிகழ்வில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவது வழக்கம். அங்கு முதல் அமைச்சர் செல்லும்போது கூட்டம் அதிகரித்து, பாதுகாப்புச் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்பதால், பசும்பொன் பயணத்தைத் தவிர்க்குமாறு உயர் போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. உளவுத்துறையும் இதே ஆலோசனையை வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பசும்பொன் பயணத்தை முதல் அமைச்சர் விஜய் தவிர்த்ததாக தவெக வட்டாரத்தில் கூறப்படுகிறது.













