Home மாவட்டங்கள் பெங்களூர் டேட்டிங் ஆப் மூலம் வீட்டிற்குள் புகுந்து ரூ.20 லட்சம் நகைகள் கொள்ளை: இருவர் கைது

டேட்டிங் ஆப் மூலம் வீட்டிற்குள் புகுந்து ரூ.20 லட்சம் நகைகள் கொள்ளை: இருவர் கைது

பெங்களூரு, அக். 30-
பெங்களூரில் டேட்டிங் ஆப் மூலம் பெண் வேடமிட்டு வீட்டிற்குள் புகுந்து, கத்தியை காட்டி மிரட்டி ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
டேட்டிங் ஆப் மூலம் அழைப்பு
பெங்களூரு நாகரபாவி பகுதியைச் சேர்ந்தவர் ரோஹித் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி இவரது மனைவி தமிழ்நாட்டிற்கு சென்றிருந்தார். மறுநாள் ரோஹித் ஹெசரகட்டாவில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு செல்லும் முன், ஒரு நாள் தங்குவதற்காக வந்திருந்த தனது நண்பர் ஹர்ஷவர்தனிடம் வீட்டின் சாவியைக் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்.
அன்று இரவு ஹர்ஷவர்தன், டேட்டிங் ஆப் மூலம் ஒரு பெண்ணிடம் சாட் செய்து, அவரை வீட்டிற்கு அழைத்துள்ளார்.
ரூ.20 லட்சம் நகைகள் கொள்ளை
அதன்படி, முகமூடி அணிந்து பெண் வேடத்தில் வந்த நபரை ஹர்ஷவர்தன் முதலில் பெண் என்றே நினைத்துள்ளார். ஆனால் வீட்டிற்குள் வந்த பிறகே அவர் திருநங்கை என்பது தெரியவந்தது. பின்னர் ஆங்கிலத்தில் பேசியபடி, அவர் மற்றொரு திருநங்கையையும் வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.
இருவரும் வீட்டில் உள்ள பொருட்களை சோதனையிட முயன்றபோது, ஹர்ஷவர்தன் அதை தடுத்துள்ளார். அப்போது இருவரும் ஹர்ஷவர்தனுக்கு கத்தியைக் காட்டி மிரட்டி, அமைதியாக இல்லையென்றால் போலீசுக்கு போன் செய்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.
பின்னர் வீட்டில் இருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்த 226 கிராம் எடையுள்ள தங்க நகைகளை கொள்ளையடித்துக்கொண்டு இருவரும் தப்பிச் சென்றனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் ரூ.20 லட்சம் ஆகும்.
இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் ராஜு கொடுத்த புகாரின் பேரில், சந்திரா லேஅவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, இந்த சம்பவத்தில் தொடர்புடைய நாஜியா மற்றும் சையத் மௌஷீன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் சந்திரா லேஅவுட் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.