Home செய்திகள் தேசிய செய்திகள் ஜனநாயகத்தை காங்கிரஸ் பலவீனப்படுத்துகிறது

ஜனநாயகத்தை காங்கிரஸ் பலவீனப்படுத்துகிறது

புதுடெல்லி, அக். 19-
எதிர்க்கட்சிகளின் சில பிரிவினர் திட்டமிட்டு கோபத்தைத் தூண்டுவது, பொய்ப் பிரசாரங்களை முன்னெடுப்பது, குழப்பத்தை ஏற்படுத்துவது, தவறான தகவல்களை ஆயுதமாகப் பயன்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகத் தெரிகிறது என்று ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார். நாட்டின் நலன்களைவிட, தங்களது சுயநலம் சார்ந்த அரசியல் இலக்குகளுக்கே அவர்கள் முன்னுரிமை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்தல் அமைப்புகளும், தேர்தல் நடைமுறைகளும் எவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றன என்பதை ஆராயும்போது, எதிர்க்கட்சிகளின் இந்த நோக்கத்தின் முக்கியத்துவம் தெளிவாகிறது. மக்களால் மீண்டும் மீண்டும் நிராகரிக்கப்படுவதை மறைப்பதற்காக, எதிர்க்கட்சிகளின் சில பிரிவினர் இதுபோன்ற தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றனர். தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியையும், அதன் மூலம் இந்தியத் தேர்தல் ஆணையம் என்ற ஒட்டுமொத்த நிறுவனத்தையும் மதிப்பிழக்கச் செய்வதற்கான தொடர் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்தல் அமைப்புகள் மற்றும் தேர்தல் நடைமுறைகள் குறித்து மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தப் பிரசாரம் நடைபெறுகிறது.ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகள் பொய்களின் அடிப்படையில் அமைந்திருக்கக் கூடாது. குழப்பத்தையும் அராஜகத்தையும் உருவாக்குவதே அவற்றின் நோக்கமாக இருக்கக் கூடாது. தேர்தல் தோல்விகளால் ஏற்படும் விரக்தியின் காரணமாக, நாட்டின் ஜனநாயக நிறுவனங்களையோ அல்லது இந்தியாவின் வளர்ச்சியையோ பணயமாக வைக்கக் கூடாது. காங்கிரஸ், தங்களது சொந்தப் பின்னடைவுகளுக்கான காரணங்களை ஆராய்வதற்குப் பதிலாக, ஒட்டுமொத்த அமைப்பின் நம்பகத்தன்மையைக் குலைக்க விரும்புகிறது. இது ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் செயலாகும். நாட்டின் முன்னேற்றம் சீர்குலைக்கப்படுவதை எந்தச் சூழலிலும் அனுமதிக்க முடியாது என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.